கனடா, மெக்சிகோவுக்கு 25%, சீனாவுக்கு 10% - இறக்குமதி வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவு !
அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். ஏற்கனவே அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே, அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற பிரச்சாரத்தை முன்வைத்து தான் தேர்தலில் வெற்றி பெற்றார். அதனை செயல்படுத்தும் வகையில் தற்போது பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார்.
உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், அதன் மூலம் அமெரிக்க அரசுக்கு வருவாயை ஈட்டும் நோக்கிலும், தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை டொனால்ட் டிரம்ப் அமல்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலால் ஏற்படும் அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க மக்களை பாதுகாக்க இந்த வரி விதிப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறினார். "இன்று, நான் மெக்சிகோ மற்றும் கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரியையும் (கனேடிய எரிசக்திக்கு 10%), சீனாவுக்கு 10% கூடுதல் வரியையும் அமல்படுத்தியுள்ளேன். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் நமது மக்களைக் கொல்லும் கொடிய போதை பொருட்களின் முக்கிய அச்சுறுத்தல் காரணமாக இது சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) மூலம் செய்யப்பட்டது."
"நாம் அமெரிக்கர்களைப் பாதுகாக்க வேண்டும், மேலும் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வது அதிபராக எனது கடமையாகும். சட்டவிரோத வெளிநாட்டினர் மற்றும் போதைப்பொருட்கள் நமது எல்லைகளில் கொட்டுவதைத் தடுப்பதாக எனது தேர்தல் பிரச்சாரத்தில் நான் உறுதியளித்து இருந்தேன். மேலும் அமெரிக்கர்கள் பெருமளவில் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.