வடகொரியாவில் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு!
வட கொரியா நாடானது அடிக்கடி ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டம் தெரிவித்துள்ளன. மேலும் ஐநா மன்றமும் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிக்க வடகொரியாவுக்கு தடை விதித்துள்ளது.
இதனையடுத்து வடகொரியாவை அச்சுறுத்தலால் தென்கொரியா நாடனது அமெரிக்காவுடன் இணைந்து கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபடுகின்றது. இப்பயிற்சியினை தங்களுக்கு எதிரான போர் ஒத்திகை என விமர்சித்துள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இந்த பயிற்சியை கைவிடுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் தென்கொரியா தொடர்ந்து அமெரிக்காவுடன் கூட்டுப்போர் பயிற்சியை நடத்தி வருகிறது. தற்போது தொடங்கியுள்ள இப்பயிற்சி 11 நாட்கள் நடைபெறும் என்றும் சுமார் 21 ஆயிரம் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிபர் கிம் ஜாங் உன் வடகொரியா தலைநகர் பியாங்க்யாங்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உருவாக்கப்பட்டு வரும் சோ ஹியோன் என்ற போர்க்கப்பலை அவர் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து அவர், " தென்கொரியா-அமெரிக்கா நாடுகள் இடையே நடைபெறும் ராணுவ பயிற்சியானது போரை தூண்டுவதாக அமைந்துள்ளது. எனவே அணு ஆயுத உற்பத்தியை உடனடியாக அதிகரிக்க வேண்டும்" என வட கொரிய ராணுவத்தினருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். கிம் ஜாங் உன்னின் இந்த உத்தரவால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது.