வக்ஃப் சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல்!
வக்ஃப் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் கடத்த ஆண்டு ஆகஸ்டில் மத்திய அரசு அறிமுகம் செய்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதையடுத்து வக்ஃப் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. கூட்டுக்குழுவில் அந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு, சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.
இதில் சில திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதையடுத்து மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.
இதற்கிடையே, வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 128 வாக்குகளும், எதிராக 95 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, 17 மணி நேர விவாதத்துக்கு பின் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அந்த மசோதா குடியரசு தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு நேற்றிரவு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் மசோதா அமலுக்கு வருகிறது.