"மக்கள் நலனை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!
மக்கள் நலனை மையப்படுத்தி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்தார்.
“காலத்தை கை வெல்லும்” என்ற லட்சினையுடன் நியாய பத்திரம் என்ற பெயரில் காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. 48 பக்கங்கள் கொண்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் முகப்பில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல்காந்தி ஆகியோர் புன்னகையுடன் கை அசைக்கும் படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழ் பகுதியில், பொதுமக்கள் மத்தியில் ராகுல்காந்தி நடைபயணமாக சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையில், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கான முக்கிய வாக்குறுதிகள் மற்றும் இலவச திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சரும், தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் தலைவருமான ப.சிதம்பரம் ஆகியோர் தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். தொடர்ந்து தேர்தல்
அறிக்கையின் சிறப்பம்சங்கள் குறித்து ப. சிதம்பரம் உரையாற்றினார்.
இதையும் படியுங்கள் : அமேதி மக்களவைத் தொகுதியில் ராபர்ட் வதேரா போட்டி?
அப்போது அவர் கூறியதாவது :
" மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை, வேலை, பொருளாதாரம், மக்கள் நலனை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில், மதம், மொழி, சாதிக்கு அப்பாற்பட்டு, இந்த தேர்தலை பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைப் போல, குடிமக்கள் அனைவருக்கும் ரூ. 25 லட்சம் வரையிலான ரொக்கமில்லா மருத்துவக் காப்பீடு கொண்டுவரப்படும்.
எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கான இட ஒதுக்கீட்டை 50 சதவீத வரம்பை உயர்த்துவதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதாகவும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.
அனைத்து சாதி, சமூகத்தினருக்கும் பாகுபாடின்றி வேலைவாய்ப்பு, கல்வி நிறுவனங்களில் 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படும்"
இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.