சிக்கிம் முதலமைச்சராக பதவியேற்றார் பிரேம் சிங் தமாங்!
சிக்கிமின் முதலமைச்சராக கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமாங் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. சிக்கிம் சட்டமன்ற தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. மீதமுள்ள ஒரு மக்களவைத் தொகுதியில் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.
இதையடுத்து, சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 9ம் தேதி மீண்டும் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதால் அதில் என்டிஏ ஆதரவு கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் பிரேம் சிங் தமாங் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். எனவே, அவரது பதவியேற்பு விழா ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டு இன்று (ஜூன் 10) நடத்த திட்டமிடப்பட்டது.
பதவியேற்றபின் பேசிய முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், “தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்ட அனைத்து அறிவிப்புகளையும் வரும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவோம். எனது ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர்கள் கடுமையாக உழைத்தனர். பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இது மிகவும் அமைதியான தேர்தல். சிக்கிமில் இது ஒரு சாதனை” என்று கூறியுள்ளார்.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று 6வது முறையாக ஒரு கட்சி அமோக வெற்றியைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.