முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு: மாநில வாரியாக பதிவாகியுள்ள வாக்குகள் நிலவரம்!
நாடாளுமன்ற தேர்தலில் முதல் கட்டமாக இன்று 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தல் நிறைவு பெற்றது.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி (இன்று) தொடங்குகிறது. இறுதி மற்றும் 7ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் எனவும், ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. அனைத்து பகுதிகளிலும் காலை முதலே பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
தமிழகம் (39), ராஜஸ்தான் (12), உத்தரப் பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் அண்ட் நிகோபார் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1), அசாம் (5), மகராஷ்டிரா (5), பிஹார் (4), மேற்குவங்கம் (3), மணிப்பூர் (2), திரிபுரா (1), ஜம்மு காஷ்மீர் (1), சத்தீஸ்கர் (1) தொகுதிகளில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.
மாலை 5 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 77.57% வாக்குகள் பதிவாகியுள்ளன. திரிபுராவில் 76.1%, புதுச்சேரியில் 72.84% வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவாகின. உத்தர பிரதேசம் 57.54%, உத்தரகாண்ட் 53.56%, ராஜஸ்தான் 50.27%, மத்திய பிரதேசம் 63.25%, மகாராஷ்டிரம் 54.85%, பிகார் 46.32%, சத்தீஸ்கர் 63.41%, ஜம்மு காஷ்மீர் 65.08%, அருணாசல் பிரதேசம் 63.44%, அந்தமான் நிகோபார் 56.87%, அஸ்ஸாம் 70.77%, லட்சத்தீவு 59.02%, மணிப்பூர் 67.66%, மேகாலயா 69.91%, மிஸோரம் 52.73%, நாகாலாந்து 55.79%, சிக்கிம் 68.06%, திரிபுரா 76.10% வாக்குகள் பதிவாகியுள்ளன.