ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி - உயர்சிகிச்சைகாக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் !
கோவையில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் சித்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் கடந்த 6 ம் தேதி பயணம் செய்துள்ளார். இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வேலை செய்து வரும் நிலையில், சொந்த ஊருக்கு பெண்களுக்கான தனிப் பெட்டியில் பயணம் செய்துள்ளார்.
பெண்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பெட்டியில் ஆண் பயணிகள் பயணம் செய்யக் கூடாது என்ற ரயில் பயண விதிமுறைகள் இருந்தும், அதனை மீறி பயணித்த கயவர்கள் இருவர் பெண்கள் பெட்டியில் ஏறி, அதில் பயணித்து கொண்டிருந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
இதனால் அந்த பெண் கூச்சலிட்டவுடன், கே.வி.குப்பம் அருகே ஓடும் ரயிலிலிருந்து அப்பெண்ணை கீழே தள்ளி விட்டுள்ளனர். கீழே விழுந்த அந்த பெண்ணின் கை, கால்களில் முறிவு ஏற்பட்டு பலத்த காயங்களுடன் தண்டவாளத்தில் கிடந்துள்ளார். பின்பு இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினருக்கு அங்குள்ளவர்கள் தகவல் தெரிவிக்க, விரைந்து வந்த போலீசார், அப்பெண்ணை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிகிச்சை பெற்று வந்த அந்த பெண் தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்திருந்தார். வாக்குமூலத்தின் அடிப்படையிலும், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் காவல்துறையினர் 31 வயதான ஹேமந்த் ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த, கர்ப்பிணி பெண்ணின் வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்ததாக நேற்று (பிப்.8 ) மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சிறப்பு மருத்துவ குழுவின் ஆலோசனையின் பேரில் கர்ப்பிணி பெண் உயர் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள CMC மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
முன்னதாக நேற்று காலை சென்னை ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மற்றும் சென்னை ரயில்வே மருத்துவ அலுவலர்கள் மருத்துவமனையில் உள்ள பெண்ணை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். மேலும் அவருக்கு கருணைத் தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை வழங்கினர். இதனிடையே கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட ஹேமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.