"பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும்.. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை" - பேரனுக்கு தேவகவுடா கடிதம்!
"பிரஜ்வல் ரேவண்ணா உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் .. இது முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை" என தனது பேரனுக்கு எழுதிய கடிதத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் இரண்டாவது கட்டமாக நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
இதனிடையே தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணா பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டார். இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டது.
மேலும் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதுடன், அவருக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்து, அவர் இந்தியாவுக்கு திரும்புவதை உறுதி செய்ய வெளியுறவு அமைச்சகம் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு உத்தரவிடுமாறு பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
தேடப்படும் குற்றவாளியாக பிரஜ்வால் ரேவண்ணா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் முன்னாள் பிரதமரும் பிரஜ்வால் ரேவண்ணாவின் தாத்தாவுமாகிய தேவகவுடா பிரஜ்வால் ரேவண்ணாவிற்கு இரண்டு பக்கத்திலான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
“ கடந்த சில வாரங்களாக மக்கள் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எதிராக கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளனர். நான் அதை அறிவேன். நான் அவர்களை நிறுத்த விரும்பவில்லை. அவர்களை நான் விமர்சிக்கவும் விரும்பவில்லை. எல்லா உண்மைகளும் வெளிவரும் வரை அவர்கள் காத்திருந்திருக்க வேண்டும் என்று நான் அவர்களுடன் வாதிட முயற்சிக்கவும் மாட்டேன்.
பிரஜ்வலின் செயல்பாடுகள் பற்றி எனக்கு தெரியாது என்று மக்களை நம்ப வைக்க முடியாது. அவரைக் காக்க எனக்கு விருப்பம் இல்லை என்றும் கூறி மக்களை நம்ப வைக்க முடியாது. அவர் எங்கு இருக்கிறார், அவருடைய வெளிநாட்டுப் பயணம் குறித்து எனக்குத் தெரியாது என்றும் என்னால் மக்களிடம் சொல்ல முடியாது. என் மனசாட்சிக்கு பதிலளிக்க நான் விரும்புபவன். நான் கடவுளை நம்புகிறேன், சர்வவல்லமையுள்ள இறைவன் உண்மையை அறிவார் .
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வலுக்கு தனது தாத்தா மீது மரியாதை இருந்தால் திரும்பி வர வேண்டும். என்னால் ஒன்று மட்டுமே செய்ய முடியும். பிரஜ்வாலை கடுமையாக எச்சரித்து, அவர் எங்கிருந்தாலும் திரும்பி வந்து காவல்துறையில் சரணடையச் சொல்லலாம். அவர் தன்னை சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும். இது நான் விடுக்கும் முறையீடு அல்ல, நான் விடுக்கும் எச்சரிக்கை.
அவர் இந்த எச்சரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை என்றால், அவர் என் கோபத்தையும் அவரது குடும்ப உறுப்பினர்களின் கோபத்தையும் சந்திக்க வேண்டியிருக்கும். அவர் மீதான குற்றச்சாட்டுகளை சட்டம் கவனித்துக் கொள்ளும், ஆனால் குடும்பத்தினரின் பேச்சைக் கேட்காமல் இருப்பது அவர் மொத்தமாக தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்யும். என் மீது அவருக்கு மரியாதை இருந்தால், அவர் உடனடியாக திரும்ப வேண்டும், ” என தேவகவுடா எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.