144 பயணிகளின் உயிரை காப்பாற்றிய விமானிகளுக்கு குவியும் பாராட்டு!
பதற்றமான சூழலில் சிறப்பாக செயல்பட்ட விமானிகளுக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து AXB 613 ரக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 144 பயணிகளை ஏற்றிக்கொண்டு மாலை 5.40 மணிக்கு சார்ஜாவுக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே செல்லாதால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது. இதனால், விமானம் 2 மணி நேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருந்தது.
விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்துவிட்டு அதன் பின்னர், தரையிறக்கலாம் என்று விமானிகள் முடிவு செய்திருந்தனர். இதனால் விமானம் வானில் 26 முறை வட்டமடித்தது. இந்நிலையில், விமானத்தின் சக்கரங்களை இயக்கவும் முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்தன. இதனால் விமான நிலையத்தில் பதற்றமான சூழல் நிழவியது.
இந்நிலையில் விமானம், இரவு 8.15 மணியளவில், பெல்லி லேண்டிங் முறையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விமானத்தில் இருந்த 6 குழந்தைகள், 2 பைலட்டுக்கள் உட்பட 144 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட ஏர் இந்தியா ஏஎக்ஸ்பி 613 விமானத்தை இரு விமானிகள் இயக்கியுள்ளனர். முதன்மை விமானியாக இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனல் என்பவரும், கோ-பைலட்டாக மித்ராயி ஸ்ரீ கிருஷ்ணா ஷீடல் என்ற இளம் பெண் விமானியும் பணியாற்றியுள்ளனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை முதன்மை விமானியான இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனலே கண்டறிந்து அதனை விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவரது அறிவுறுத்தலில் பேரிலேயே இணை விமானியான மித்ராயி விமானத்தை இயக்க உதவியாக இருந்தோடு, தரையிறக்கும் போதும் உதவியாக இருந்துள்ளார். விமானம் பத்திரமாக தரையிறங்கியதும், அவர்கள் அங்குள்ள விமானிகள் அறையில் ஓய்வெடுத்தனர். பின்னர் விமான நிலையத்தில் இருந்து அவர்கள் வெளியேறிய போது கைதட்டி ஆரவாரமாக வரவேற்றனர்.
இந்நிலையில் முதன்மை விமானியாக இக்ராம் ரிஃபாட்லி ஃபஹ்மி ஜைனலுக்கும், கோ-பைலட் மித்ராயி ஸ்ரீ கிருஷ்ணா ஷீடலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. மேலும், விமானிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் மற்றும் பொதுமக்கள் விமானிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்தது:
“ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியதை அறிந்து நிம்மதி அடைந்தேன். தரையிறங்குவதில் சிக்கல் என்ற தகவல் கிடைத்ததும், அலுவலர்களுடன் உடனடியாக தொலைபேசி வாயிலாக அவசரக் கூட்டத்தைக் கூட்டி, தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவ உதவிகள் எனத் தேவையான அனைத்துப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தயார் நிலையில் வைத்திட அறுவுறுத்தி இருந்தேன்.
பயணிகள் அனைவரும் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும், அவர்களுக்கு மேற்கொண்டு தேவைப்படும் உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியரிடம் தற்போது கூறியுள்ளேன். பாதுகாப்பாக விமானத்தை தரையிறக்கிய விமானி மற்றும் விமானக் குழுவினருக்கும் எனது பாராட்டுகள்!” என அதில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சுமார் ஆறு மணி நேர தாமதத்துக்கு பிறகு வேறொரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிகள் ஷார்ஜா புறப்பட்டனர். அதில் 109 பயணிகள் பயணித்தனர். 35 பயணிகள் அச்சம் காரணமாக பயணத்தை தவிர்த்து விட்டனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.