அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் -Tsunami எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதி!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ஃபெர்ண்டலே எனும் பகுதியில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. இதேபோல வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்தனர். நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் பலரும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறி நின்றனர். எனினும் சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டதால் மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
மக்களுக்கு தேவையான உதவிகள் செய்ய அவசர குழுவினர் நிலநடுக்கம் உணரப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பட்டுள்ளதாக கலிபோர்னியா மாகாண அதிகாரிகள் கூறினர்.