நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு!
நியூசிலாந்தின் மேற்கு கடற்கரையில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில், கடல் தளத்திற்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் காரணமாக வீடுகள் குலுங்கியதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இதனிடையே 5 மில்லியன் மக்கள் வசிக்கும் நியூசிலாந்தில், பசிபிக் பெருங்கடலைச் சுற்றியுள்ள நில அதிர்வுப் பிளவுகளின் வளைவான "நெருப்பு வளையத்தில்" அமைந்துள்ளது. இந்த பகுதியில் பூகம்பங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் பொதுவானவை என கூறப்படுகிறது.