மியான்மரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடி!
மியான்மரில் மத்திய பகுதியில் இன்று (மார்ச் 28) 7.2 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் சகாயிங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிமீ தொலைவில் 10 கிமீ ஆழத்தில், உள்ளூர் நேரப்படி மதியம் 12:50 மணியளவில் ஏற்பட்டதாக USGS தெரிவித்துள்ளது.
தொடர்ந்து அண்டை நாடான பாங்காங்கின் தலைநகரான மியான்மரிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக USGS மற்றும் ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் மையம் தெரிவித்துள்ளது, தொடர்ந்து தாய்லாந்தில் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டது. மேலும் சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டதாக பெய்ஜிங்கின் நிலநடுக்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர் நிலநடுக்கதிற்கு மத்தியில் இன்று மதியம் 1.03 மணிக்கு, மேகாலயாவின் கிழக்கு காரோ மலைகளில் 4.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்தியாவில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுத்தால் கட்டடங்கள் குலுங்கி மக்கள் பீதியில் வெளிவந்து அலறியடித்து பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியுள்ளனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் உயிரிழப்புகள் அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
இந்த நிலையில் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட பேரிடருக்கு பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள நிலைமை கவலை அளிக்கிறது. அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்திக்கிறேன்.
இந்தியா சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது. இது சம்பந்தமாக, எங்கள் அதிகாரிகள் தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும், மியான்மர் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களுடன் தொடர்பில் இருக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.