இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு!
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே 89 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம், பொருள் சேதம் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதுகுறித்து ஜெர்மன் புவியியல் ஆய்வு மையம் கூறுகையில், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்தோனேசியா, புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், 'நெருப்பு வளையம்' என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
முன்னதாக இந்தோனேசியா அருகே 2004-ஆம் ஆண்டு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 2.30 லட்சம் பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.