மின்சாரமின்றி இருளில் மூழ்கிய காஸா மருத்துவமனைகள்: 2 நாட்களில் 24 பேர் உயிரிழந்த அவலம்!
காஸா மருத்துவமனையில் மின் பற்றாக்குறை காரணமாக கடந்த 2 நாட்களில் மட்டும் 24 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. வடக்கு காசாவில் அமைந்துள்ள பெரிய அல்-ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த போர் காரணமாக, காசா மிகவும் மோசமான நிலையில் உள்ளது. காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் சிக்கியுள்ளனர்.
அங்குள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள், தண்ணீர், உணவு போன்றவை கிடைப்பதில் மிகவும் சிரமமான நிலை ஏற்பட்டுள்ளது. பல நாட்டினரும் காசாவில் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்தாலும், அவர்கள் வழங்கும் உதவிகள் எல்லையை கடந்து காசாவை சென்று சேர்வதில் கடும் சிரமம் உள்ளது.
காஸாவிலுள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையை மூன்றாவது நாளாக இஸ்ரேல் ராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். மருத்துவமனை வளாகத்தில் மறைந்துள்ள ஹமாஸ் படையினரை தேடும் பணிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். மருத்துவமனையிலுள்ள ஹமாஸ் படையைச் சேர்ந்தவர்களை வெளியேற்றுவதற்காக மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஆனால், காஸா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாகவும், பிற்ந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று இரண்டு எரிபொருள் வாகனங்களை மருத்துவமனைக்காக இஸ்ரேல் ராணுவம் காஸாவினுள் அனுமதித்துள்ளது.