உடன்குடி அனல்மின் நிலையத்தில் மே மாதத்திற்குள் மின் உற்பத்தி தொடக்கம் - மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலையப் பணிகளை தமிழ்நாடு மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வரும் மே மாதத்திற்குள் பணிகள் முடித்து முதல் அலகிலிருந்து மின் விநியோகம் செய்யப்படும்.
உடன்குடி அனல்மின் நிலைத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தும் தமிழ்நாட்டிற்கு மட்டும் வழங்கப்படும். விரைவில் மின் தடை இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்கும். பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவே உடன்குடி அனல்மின் நிலையம் பணிகள் நிறைவடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் வேலை வாய்ப்புக்கான நல்ல திட்டமாக உடன்குடி அனல்மின் நிலையத்திட்டம் இருக்கும். தமிழ்நாடு மின்வாரியத்தில் இருக்கும் வருவாய் இழப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.