கொட்டித் தீர்க்கும் மழை - திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு.!
தென் மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதையும் படியுங்கள்: தொடர் கனமழை | தென் மாவட்டங்களில் உதவிகள் கோர வாட்ஸ்ஆப் எண் அறிவிப்பு!
திருநெல்வேலியில் பேருந்து நிலையத்தில் இருந்து சிந்துபூந்துறை செல்லும் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக பகுதிகள், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடி வருவதால் மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
செல்லும் வழியில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சந்தித்து, அங்குள்ள மழை நிலவரம் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கைப் பணிகளை மேற்கொண்டு மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மழைநீர் சூழ்ந்த திருநெல்வேலி சந்திப்பு பகுதிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழ்நாடு அரசின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் நேரில் ஆய்வு செய்தனர்.