”பெண்களுக்கு எதிராக முகநூலில் பதிவிடுவது கண்டிக்கத்தக்கது”-தமிழிசை சௌந்தர்ராஜன்!
கடந்த 2017ம் ஆண்டு முகநூலில் விசிக பிரமுகர் அவதூறு கருத்து பதிவு செய்தது தொடர்பான வழக்கு கடலூர் சிறப்பு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் இன்று சாட்சியாக பாஜக முன்னாள் மாநில தலைவரும், புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் ஆஜரானார்.
இதனை தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”பெண்களுக்கு எதிராக முகநூலில் பதிவு செய்வது கண்டிக்கத்தக்கது. அதனை கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து நீக்க வேண்டும். முகநூலில் தற்போது
அதிகளவு மேசமாக எழுதுகிறார்கள். அதிலும் ஆண் தலைவர்களை விட பெண் தலைவர்கள் குறித்து மோசமாக எழுதுவது அதிகரித்துள்ளது. பல்கலைக் கழகங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. விளம்பர அரசாக உள்ள தமிழக அரசானது, பெண்களுக்கு பாதுகாப்பற்ற தன்மைக்கு தள்ளும் அரசாக உள்ளது” என குற்றம்சாட்டினார்.
மேலும் அவர், ”நான் இந்த வழக்காடு மன்றத்திற்கு வந்ததற்கு காரணம் பெண்களுக்கு எதிரான போராட்டங்களில் நான் துணை நிற்பேன் என்பதற்காகவே. தண்டனை பெற்று தருவது என் நோக்கம் அல்ல” என்றுத் தெரிவித்தார்