#RakshaBandhan குறித்த பதிவு - Infosys சுதா மூர்த்தியை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!
ரக்ஷா பந்தன் குறித்து பதிவு ஒன்றை எழுதிய இன்ஃபோசிஸ் நிறுவனர் சுதா மூர்த்தியை இணையவாசிகள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது. ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.
ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். இந்த நாளில், சகோதரிகள் தங்கள் சகோதரர்களின் மணிக்கட்டில் ஒரு புனித கயிறு கட்டுவர். தீயவற்றில் இருந்து சகோதரர்களைக் காப்பாற்றவும், அவர்களது நல்வாழ்வுக்காகவும், நீண்ட ஆயுளுக்காகவும் சகோதரிகள் பிரார்த்தனை செய்து புனித கயிறு கட்டுவது வழக்கம்.
இன்றைய தினம் பலரும் தங்களது சகோதரர்களுக்கு கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மாநிலங்களவை உறுப்பினரும் பிரபல இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனவருமான சுதா மூர்த்தி ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
" ரக்ஷா பந்தன் அல்லது ராக்கி என்பது என் கருத்துப்படி ஒரு சகோதரி சகோதரனுக்கு கயிறு கட்டும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இதன் பொருள் கடினமான காலங்களில், எனக்கு உதவ நீங்கள் எப்போதும் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
ராணி கர்ணாவதி ஆபத்தில் இருந்தார். அவருடைய அரசு மிகச் சிறியது . அவருக்கு எதிரி ஒருவரால் அச்சுறுத்தல் ஏற்பட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த ராணி கர்ணாவதி ஆபத்தில் இருப்பதாக முகலாய பேரரசரான ஹுமாயூன் மன்னருக்கு கடிதம் அனுப்பி ஒரு சிறு கயிறையும் அனுப்பினார். என்னை உங்கள் சகோதரியாக கருதி தயவு செய்து என்னை பாதுகாக்க வாருங்கள் என குறிப்பிட்டிருந்தார்.
Raksha Bandhan has a rich history. When Rani Karnavati was in danger, she sent a thread to King Humayun as a symbol of sibling-hood, asking for his help. This is where the tradition of the thread began and it continues to this day. pic.twitter.com/p98lwCZ6Pp
— Smt. Sudha Murty (@SmtSudhaMurty) August 19, 2024
முகாலயப் பேரரசர் ஹுமாயூனுக்கு அவர் அனுப்பிய கயிறு பற்றி தெரியாது. ஹுமாயூன் அப்பகுதி மக்களிடம் விசாரித்தார். ஒரு சகோதரியிடமிருந்து அண்ணனுக்கு வந்த அழைப்பு எனத் தெரிந்து கொண்டார். நான் போய் ராணி கர்ணாவதிக்கு உதவுகிறேன் எனக் கூறி டெல்லியை விட்டு சென்று அவருக்கு உதவச் சென்றார். சிறிது காலதாமதம் ஆனதால் அவர் உயிரிழந்தார்” என சுதா மூர்த்தி குறிப்பிட்டிருந்தார்.
சுதா மூர்த்தியின் இந்த பதிவிற்கு பலரும் கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். உண்மையான ரக்ஷா பந்தன் வரலாறு தெரியாமல் அவர் குறிப்பிட்டுள்ளார் என சில X பயனர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.