மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு - தமிழ்நாடை பின்பற்றிய தெலங்கானா!
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்புக்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டபேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த மார்ச் 22 ஆம் தேதி சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு நடத்தப்பட்டது. இதில் ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஒடிசா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது, சமூக மற்றும் பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது என்றும் தொகுதி மறுசீரமைப்பை அடுத்த 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட வேண்டுமென என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த ரெட்டி தலைமையில் இன்று(மார்ச்.27) நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறைவரையறைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், அனைத்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு தொகுதி மறைவரையறை செய்வதை வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும் மக்கள் தொகை கட்டுப்பாட்டை சிறப்பாக செய்த மாநிலங்கள் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படக்கூடாது. எனவே தொகுதி மறுசீரமைப்பிற்கு மக்கள் தொகை மட்டும் அளவாக இருக்ககூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை உடனடியாக 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதற்காக அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது.