போப் பிரான்சிஸ் மறைவு : இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு!
போப் பிரான்சிஸின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தியாவில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1,300 ஆண்டுகளில் முதல் ஐரோப்பியரல்லாத போப்பாக இருந்த பிரான்சிஸ் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 88.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸுக்கு கடந்த பிப்ரவரி மாதம், திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவருக்கு சுவாச குழாயில் பாதிப்பு ஏற்பட்டது. பல வகையான தொற்று பாதிப்பும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த போப் பிரான்சிஸ், உடல்நலம் தேறிய நிலையில் டிஜ்சார்ஜ் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த போப் பிரான்சிஸ் நேற்று (ஏப்ரல் 21) காலை 7.35 மணிக்கு காலமானதாக வாடிகன் தெரிவித்தது. போப் பிரான்சிஸின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசு மூன்று நாள் துக்கத்தை அறிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஏப்ரல் 22, ஏப்ரல் 23 ஆகிய இரண்டு நாட்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கின்போது ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படுவதால் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும், மேற்குறிப்பிட்ட தினங்களில் எவ்வித அரசு நிகழ்ச்சி கொண்டாட்டங்களும் இருக்காது எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.