ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் ஆன போப் பிரான்சிஸ்!
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ்(வயது.88) கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக பிரான்சிஸ் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு அவரின் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருப்பது மருத்துவர்களால் கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த அவருக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது இறுதி சடங்கள் குறித்த கேள்விகள் வாடிகனில் எழுந்ததது. தொடர் சிகிச்சைக்கு பின்னர் கடந்த மார்ச் முதல் வாரத்தில் அவர் அபாய நிலைய தாண்டி விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று(மார்ச். 23) அவருக்கு சிகிச்சையளித்து வந்த மருத்துவர், “போப் உடல்நிலை சீராக உள்ளது. அவர் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புகிறார். எனினும் அவர் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இந்த நிலையில் போப் பிரான்சிஸ் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு, அவர் மருத்துவமனையில் இருந்தவாறு அங்கு கூடியிருந்து நூற்றுக்கணக்கான மக்களுக்கு கை அசைத்து ஆசீர்வாதம் வழங்கினார். ஐந்து வார கால சிகிச்சைக்கு பிறகு போப் பிரான்சிஸ் வீடு திரும்ப உள்ளார்.