பூந்தமல்லி - முல்லைத்தோட்டம்: மெட்ரோ வழித்தடத்தில் சோதனை ஓட்டம் தொடக்கம் !
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4ல் பூந்தமல்லி பணிமனை மெட்ரோ நிலையம் முதல் முல்லை தோட்டம் மெட்ரோ ரயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது இரண்டாம் கட்டப் பிரிவின் முதல் வழித்தட சோதனை மற்றும் மெட்ரோ ரயில் ஓட்டத்தை தொடங்கியுள்ளது.
இந்நிகழ்வில், தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.கோபால், அரசு முதன்மை செயலாளரும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநருமான மு.அ.சித்திக், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன், நிதி இயக்குநர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, தலைமைப் பொது மேலாளர்கள் மற்றும் பல முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் இந்த திட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி பேசினார்கள்.
அப்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக், இ.ஆ.ப., கூறுகையில், "இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 4-ல் உயர்மட்ட வழித்தடத்தில் இன்று நடத்தப்பட்ட முதல் வழித்தட சோதனை இரண்டாம் கட்ட திட்டத்தின் முன்னேற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும்" என்றார். அதாவது, இந்த சோதனை ஓட்டம் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஒரு பெரிய முன்னேற்றம்" என்று தெரிவித்தார்.
மேலும் இந்த உயர்மட்ட வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை நிலையத்திலிருந்து முல்லைத் தோட்டம் நிலையம் வரை சுமார் 3 கி.மீ. நீளம் கொண்டது. இது பூந்தமல்லி பணிமனையுடன் இணைக்கப்பட்டுள்ளது. தற்போதைய சோதனை மற்றும் செயல்பாட்டுக்கு, பூந்தமல்லி பணிமனை இந்த பகுதியின் மெட்ரோ ரயிலுக்கான சோதனைகளை ஒருங்கிணைக்கும் மையமாக செயல்படும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் படிப்படியாக மெட்ரோ ரயில் வழித்தட சோதனைகளுக்கு புதிய பிரிவுகளைச் சேர்க்கும். இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதற்கான சோதனைகள் நடத்தப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.