பொன்னி வளநாட்டில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றிழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்று மாசி பெருந்திருவிழா தொடங்கியதையடுத்து தூண்டி கருப்ப சுவாமி ஆலயத்தில் நேற்று வழிபாடு தொடங்கியது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொன்னி வளநாட்டில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றிழைக்கப்படும் பொன்னர் – சங்கர் மாமன்னர்களின் வீர வரலாற்றுச் சரித்திரம் படைத்த கோயில்கள் உள்ளன. இந்தக் கோயில்களைக் கொங்கு நாட்டு மக்கள் குலதெய்வக் கோயில்களாக வழிபட்டு வருகின்றனர். இங்கு பொன்னர் - சங்கர், கன்னிமாரம்மன், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ணசாமி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் கோயில் கொண்டுள்ளன. இந்தக் கோயில்களில் ஒவ்வொரு ஆண்டும் மாசிப் பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். புகழ்பெற்ற இந்தத் திருவிழாவிற்குத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.
அந்த வகையில் இந்த ஆண்டு மணப்பாறை அருகே கோட்டை கட்டி வாழ்ந்த பொன்னி வளநாட்டிலும், அண்ணன்மார்கள் வீரப்போரிட்டு மாண்ட இடமான வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோயிலிலும் கடந்த மார்ச் 9 ஆம் தேதி ஸ்ரீ கன்னிமாரம்மன் திருக்கோயில் காப்பு கட்டுதல், கொடியேற்றம் ஆகியவற்றுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், அண்ணன்மார் தெய்வங்களின் குலதெய்வமாகப் போற்றப்படும் வளநாடு தூண்டி கருப்ப சுவாமி ஆலயத்தில் பரம்பரை அறங்காவலர் எஸ்.ஜோதிமலர், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் வழிபாடு நேற்று தொடங்கியது.
இதனைத்தொடர்ந்து, வளநாட்டில் தங்காள் கோயில் திருவிழா, தீர்த்தம் எடுத்தல், வெள்ளிக்கிழமை தங்கைக்கு கிளி பிடித்தல், இரவு படுகளம், சனிக்கிழமை வீரப்பூரில் வேடபரி, ஞாயிற்றுக்கிழமை பெரிய தேரோட்டம் ஆகியவை நடைபெறுகிறது. வளநாடு தூண்டி கருப்ப சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், 5-ஆம் ஆண்டாக கீரின்லைப் பவுண்டேஷன் மற்றும் வள்ளலார் அறக்கட்டளை சார்பில் வழிபாட்டிற்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான ஏற்பாடுகளை பவுண்டேஷன் தலைவர் நல்லமுத்து, பொருளாளர் இலுப்பூர் கதிரவன், ஒருங்கிணைப்பாளர் சியாமளா நல்லமுத்து ஆகியோர் செய்திருந்தனர்.