பொங்கல் திருநாள் | தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு...!
பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்ட நிலையில், சேலத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் 10 சவரன் தங்க சங்கிலியை காணிக்கையாக வழங்கினார்.
மயிலாடுதுறையில் மாயூரநாதர் ஆலயத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கோயில் நடை அதிகாலையில் திறக்கப்பட்ட நிலையில், பக்தர்களால் வழங்கப்பட்ட 250 லிட்டர் நெய் மற்றும் பால், கொண்டு சுவாமி மற்றும் அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஞாயிறு கிராமத்தில் உள்ள புஷ்பரதீஸ்வரர் சிவன் கோயிலில் பொங்கல் பண்டிகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்வில், சூரிய பகவானுக்கு பால், பன்னீர் மற்றும் வாசனைத் திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பபட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் பொங்கல் திருநாளையொட்டி பொன்னம்மா காளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்றனர். இதனை தொடர்ந்து காளியம்மன் கோயிலில் பால்குட திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.