பொங்கல் பரிசுத்தொகை - தமிழக அரசுக்கு தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!
மத்திய அரசு ரூ.7000 ஆயிரம் நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு பரிசுதொகை வழங்காதது ஏன்? என தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் பாரதிதாசன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் ஐம்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரியின் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“சாரை கண்டுபிடித்துக் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது கேலிக்கூத்தான விஷயம். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது சிறிதும் கிடையாது. 11 மாதகாலமாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு போராடுவது போல் தமிழ்நாடு அரசு நாடகமாடுவது எந்த விதத்தில் நியாயம்?
மத்திய அரசு ஏழாயிரம் கோடி தமிழக அரசுக்கு நிதி அளித்துள்ளது. அப்படி
இருந்தும் தமிழர் கொண்டாடும் பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு ஏன் ஆயிரம் ரூபாய் கொடுக்கக் கூடாது?. தேர்தல் நேரத்தில் அது கொடுப்பேன், இது
கொடுப்பேன் என சொல்லிய திமுக அரசு, பொங்கல் நேரத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மக்கள் பண்டிகையை நன்கு கொண்டாடுவார்கள்.
தேர்தல் நேரத்தில்தான் கொடுப்போம் என அமைச்சர் துரைமுருகன் பேசியிருப்பது வேடிக்கையாக உள்ளது. கல்வி அமைச்சர் நிதி இல்லை என கை விரிக்கிறார். இதனைப் பார்க்கும்போது தமிழக அரசு முற்றிலுமாக தோல்வி
அடைந்து விட்டது கண்கூடாக தெரிகிறது. மத்திய அரசுடன் சண்டை போடுவதையே குறிக்கோளாக வைத்திருக்காமல் இருந்தால், தமிழக அரசினால் எவ்வளவோ நல திட்டங்களை கொண்டு வர முடியும். ஆனால் அரசியல் செய்து
தமிழக மக்களை திமுக வஞ்சிக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து இப்போதே கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் பின்வாங்க ஆரம்பித்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்காரர்கள் பொறுத்து பொறுத்து பார்த்து பொங்கி எழுந்து விட்டனர். 2026ஆம் ஆண்டு திமுகவிற்கு எளிதில் வெற்றிக் கிடைக்காது” என தெரிவித்தார்.