For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

3,186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

பொங்கல் திருநாளையொட்டி 3186 காவலர்கள், அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
11:37 AM Jan 13, 2025 IST | Web Editor
3 186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கம்   முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement

2025 பொங்கல் திருநாளையொட்டி 3,186 தமிழக காவல் துறை மற்றும் சீருடை அலுவலர்கள்/பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

Advertisement

“தமிழ்நாட்டில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டினை அங்கீகரித்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் (ஆண்/பெண்) காவலர் நிலை-2, காவலர் நிலை-1, தலைமைக் காவலர் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் நிலைகளில் 3000 பணியாளர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்” அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் முன்னணி தீயணைப்போர், இயந்திர கம்மியர் ஓட்டி, தீயணைப்போர் ஓட்டி (தரம் உயர்த்தப்பட்ட இயந்திர கம்மியர் ஓட்டி) மற்றும் தீயணைப்போர் (தரம் உயர்த்தப்பட்ட முன்னணி தீயணைப்போர்) ஆகிய நிலைகளில் 120 அலுவலர்களுக்கும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் முதல் நிலை வார்டர்கள் (ஆண்), இரண்டாம் நிலை வார்டர்கள் (ஆண்) மற்றும் இரண்டாம் நிலை வார்டர்கள் (பெண்) நிலைகளில் 60 பேர்களுக்கும் “தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப்பதக்கங்கள்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலைவேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி ரூ.400/-, 2025 பிப்ரவரி 1-ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மேலும், காவல் வானொலி பிரிவு, மோப்ப நாய் படைப் பிரிவு மற்றும் காவல் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 நபர்கள் வீதம், மொத்தம் 6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்” வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இப்பதக்கங்கள் பெறும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு அவரவர்களின் நிலைகளுக்குத் தக்கவாறு ரொக்க தொகை வழங்கப்படும். இவர்கள் அனைவருக்கும் பின்னர் நடைபெறும் சிறப்பு விழாவில் பதக்கம் மற்றும் முதல்வர் கையொப்பத்துடன் கூடிய பதக்கச்சுருள் வழங்கப்படும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
Advertisement