பொங்கல் தொடர் விடுமுறை | நெரிசலில் சிக்கி தவிக்கும் தாம்பரம்!
பொங்கல் பண்டிகை, தொடர் விடுமுறை காரணமாக, தாம்பரம் - பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் காலை முதலே கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கினர். சென்னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி, வேலை காரணமாக வந்தவர்களும் பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாட பேருந்து, ரயில்களில் செல்ல முன்கூட்டியே ஆயத்தமாகி விடுவார்கள்.
இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு தொடங்கி இருக்கைகள் வேகமாக நிரம்பியது. நேற்று முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் முதல் தொடங்கியது. நேற்று காலை முதலே பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 901 பேருந்துகள் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டன.
நேற்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் உதவிக் குழுக்கள் மூலமும் பயணிகளுக்கு வழிகாட்டுதல்கள் செய்யப்பட்டன. நேற்று இரவு முன்பதிவு செய்யாத பயணிகளின் வசதிக்காக நேற்று இரவு 7 மற்றும் 8-வது நடைமேடைகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகள் உடமைகளை எளிதில் எடுத்துச்செல்ல ஆங்காங்கே ‘டிராலி’ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மேலும் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்களை அழைத்துச்செல்ல 5 பேட்டரி வாகனங்கள் உடனுக்குடன் இயக்கப்பட்டன.
முதல் நாளான நேற்று சென்னையில் 1,600 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இதனால் நேற்று மாலை முதல் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலை, கிண்டி கத்திப்பாரா பகுதி, ஈக்காட்டுத்தாங்கலில் இருந்து ஆலந்தூர் நோக்கிச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும், தாம்பரம் குரோம்பேட்டையில் பொதுமக்கள் பண்டிகைகாக புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க வருவாதால் கடுமையான வாகன நெரிசலில் தாம்பரம் சிக்கி தவிக்கிறது. போக்குவரத்து போலீசார் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.