பொங்கல் விடுமுறை - ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் சொந்த ஊர் திரும்பினர்!
பொங்கல் விடுமுறைக்காக ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.
ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்காக தமிழ்நாடு அரசு ஜனவரி 14 முதல் 19 வரை தொடர் விடுமுறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் வேறு ஊர்களில் தங்கியிருக்கும் வெளியூர் காரர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக படையெடுத்துள்ளனர்.
அரசு போக்குவரத்து கழகம் இயக்கியுள்ள சிறப்பு பேருந்துகளில் 10,11, 12 ஆகிய மூன்று நாட்கள் சேர்த்து இதுவரை ஒட்டு மொத்தமாக 6,40,465 பயணிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக ஆம்னி பேருந்துகளில் 1.9 லட்சம் பயணிகள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இது குறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அ.அன்பழகன் குறிப்பிட்டுள்ளதாவது :
”பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து ஜனவரி 10 ஆம் தேதி அன்று 1446 பேருந்துகளில் 57 ஆயிரம் பயணிகளும், ஜனவரி 11 ஆம் தேதி அன்று 1680 பேருந்துகளில் 68 ஆயிரம் பயணிகளும், நேற்று 12 ஆம் தேதி அன்று 1640 பேருந்துகளில் 65,000 பயணிகளும் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு பயணமாகியுள்ளனர்.
மொத்தம் சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆம்னி பேருந்துகளில் 1,90,000 பயணிகள் சென்றுள்ளனர். இந்தப் பொங்கல் பண்டிகைக்கு பயணிகள் செல்ல 4 நாட்கள் இருந்ததால் கட்டண சம்பந்தமான புகார்கள் பெரிய அளவில் எழவில்லை. சாதாரண நாட்களைப் போலவே இந்த நாட்களிலும் ஆம்னி பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகளுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” என அ.அன்பழகன் தெரிவித்தார்.