பொங்கல் கொண்டாட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!
உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இன்று பொங்கல் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில்,
உழவே தலை என உழுதுண்டு உலகத்தார்க்கு உண்டி கொடுக்கும் உழவர் பெருமக்களுக்கும் - உலகெங்கும் வாழும் தமிழ் உடன்பிறப்புகளுக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்!
உதயசூரியனின் ஒளியெனத் தமிழரின் உள்ளங்களில் மகிழ்ச்சி நிறையட்டும்! புதுப்பானையில் #தைப்பொங்கல் பொங்குவதுபோல் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!” என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி,
உலகத் தமிழர்கள் அனைவரும் அன்பு பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழும் அறுவடைத் திருநாளாம் பொங்கல் திருநாளில், மக்கள் அனைவரும் குன்றா நலமும், குறையா வளமும், மங்கா புகழும், மாசிலா செல்வமும் பெற்று நிறை வாழ்வு வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து, முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது தூய வழியில் மனதார வாழ்த்தி, மக்கள் அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.