உலகிலேயே மிக உயரமான வாக்குச்சாவடி - எங்கு உள்ளது தெரியுமா?
இமாச்சல பிரதேசத்தில் 52 வாக்காளர்களுக்காக மலைகளுக்கு இடையே உலகின் மிக உயரமான பள்ளத்தாக்கு பகுதியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தின் எல்லை மாவட்டமான லாஹவுல் மற்றும் ஸ்பிதி பள்ளத்தாக்கில் 15,256 அடி உயரத்தில் உலகின் மிக உயரமான வாக்குச் சாவடியைக் கொண்ட தாஷிகாங் என்கிற கிராமம் உள்ளது. இந்தியா-சீனா எல்லையில் இருந்து 29கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த வாக்குச்சாவடி தாஷிகாங் மற்றும் கெட்டே ஆகிய இரண்டு கிராமங்களை உள்ளடக்கியது. இக்கிராமங்களில் மொத்தம் 75 பேர் வசிக்கின்றனர். அதில் 30 ஆண்கள் மற்றும் 22 பெண்கள் என 52 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
ஸ்பிதி பகுதி ஒரு கடுமையான குளிர் பாலைவன பள்ளத்தாக்கு ஆகும். இது கிழக்கில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய தன்னாட்சிப் பகுதியின் எல்லையாக உள்ளது. இந்த பள்ளத்தாக்கில் தாஷிகாங் உள்பட மொத்தம் 29 வாக்குச் சாவடிகள் உள்ளன.
இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை, மாநிலத்தில் ஒரே கட்டமாக ஜூன் 1-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் காங்கிரஸின் விக்ரமாதித்ய சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளரும் நடிகையுமான கங்கனா ரணாவத் களம் காண்கிறார்.