பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் பரபரப்பு: வழிதவறி பறந்த யானை பலூன் - நடந்தது என்ன தெரியுமா?
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஜனவரி மாதம் பொங்கல் விடுமுறையை கொண்டாடும் வகையில் கடந்த 9 ஆண்டுகளாக பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று (ஜன. 14) பத்தாவது சர்வதேச பலூன் திருவிழா கோவை சாலையில் உள்ள ஆச்சிபட்டி மைதானத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் தனியார் அமைப்பு சார்பில் துவங்கப்பட்டது.
இத்திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரேசில்,
வியட்நாம் மற்றும் பெல்ஜியம் ஆகிய 7 நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட 11
வகையான பலூன்களில் வெப்பக்காற்று நிரப்பப்பட்டு வானில் பறக்க விடப்பட்டது. இந்த திருவிழா தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறும். தொடக்க விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டு கண்டு ரசித்தனர். பலூன்களில் பார்வையாளர்கள் பறப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில் யானை வடிவிலான பலூனானது பார்வையாளர்கள் சிலரை ஏற்றிக் கொண்டு வானில் பறக்க விடப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக வழிதவறி பாலக்காடு மாவட்டம் மீனாட்சிபுரம் அருகே உள்ள கன்னிமாரி முள்ளந்தோடு என்ற இடத்தில் பலூன் தடுமாறி அங்கே உள்ள வயல் வெளியில் இறங்கியது.
இதனையடுத்து அங்கிருந்த சிலர் பலூன்களில் இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். பின்னர் அந்த பலூனை விழா ஏற்பாட்டாளர்கள் வாகனத்தில் ஏற்றி கொண்டு வந்தனர். பலூன் எதனால் தடுமாறி கீழே இறங்கியது என்பது குறித்து விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவில்லை.