"அரசியலை மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும்" - தவெக தலைவர் விஜய்க்கு நடிகர் விஷால் அட்வைஸ்!
"அரசியலை மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும்" தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு நடிகர் விஷால் அறிவுரை வழங்கியுள்ளார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தனது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தலில் நேரடியாக களமிறங்குவது அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3பக்க அறிக்கையாக வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல, அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன். தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடுவோம். ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன்” என அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர்களுக்கு காணொலி வாயிலாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியதாக தவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமான விஜய் கூறியதாவது:
இடையூறுகள், விமர்சனங்கள் வந்தால் புன்னகையுடன் கடந்து செல்லுங்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்துங்கள். குக்கிராமங்களிலும் கட்சியைப் பற்றி தெரியப்படுத்த வேண்டும். 2024 தேர்தலுக்குப் பின் கட்சிப் பணிகள் தீவிரமடையும். இவ்வாறு நடிகர் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால் தெரிவித்ததாவது..
“ என் பதவிக்காலம் முடிவதற்குள் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும் . அரசியலுக்கு வருவது குறித்து தகுந்த நேரம் வரும்போது உறுதியாக தெரிவிப்பேன். நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். அவர் அரசியலை மக்களுக்கு செய்யும் சேவையாக பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.