“அரசியலில் நாங்கள் குழந்தைதான்… ஆனால்…” - TVKMaanaadu-ல் விஜய் பேசியது என்ன?
“அரசியலில் நாங்கள் குழந்தைதான் ஆனால் பயமறியா குழந்தை என தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் பேசியுள்ளார்.
இன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியதாவது;
“ஒரு குழந்தை முதல் முதலில் அம்மா என்று சொல்லும் பொழுது, அம்மாவிற்கு ஒரு சிலிர்ப்பு வரும். அந்த சிலிர்ப்பு எப்படி இருந்தது என்று அம்மாவிடம் கேட்டால், அதனை அம்மாவால் தெளிவாக விளக்கி சொல்ல முடியும். அந்த உணர்வு எப்படி இருந்தது என்று அந்த குழந்தையிடம் கேட்டால், அந்த குழந்தை எப்படி சொல்லும். குழந்தைக்கு முதலில் எப்படி சொல்லத் தெரியும். குழந்தைக்கு மழலை வெள்ளந்தியாக சிரிக்க தான் தெரியும்.
குழந்தைக்கு வார்த்தைகளால் சொல்லத் தெரியாது. அந்த உணர்வுடன்தான் உங்கள் முன் நிற்கிறேன். தாயிடம் தன்னுடைய உணர்வை சொல்லத் தெரியாமல் இருக்கும் அந்த குழந்தைக்கு முன்பு, ஒரு பாம்பு படம் எடுக்கிறது. என்ன நடக்கும்?. யார் முன்பு பாம்பு வந்தாலும் அலறியடித்துக் கொண்டு ஓடுவார்கள். பாம்பு வந்தால் படையே நடுங்கும் என்பார்கள்.
ஆனால் குழந்தையோ, அம்மாவிடம் சிரித்ததுபோல் பாம்பிடமும் சிரித்து, அதனை கையில் பிடித்து விளையாடும். அப்போ குழந்தைக்கு பாம்பை பார்த்தால் பயம் இல்லையா? எனக் கேள்வி வரும். பாச உணர்வே என்னவென்று சொல்லத் தெரியாத குழந்தைக்கு பயம் மட்டும் எப்படி சொல்லத் தெரியும்?.
இங்கு அந்தப் பாம்புதான் அரசியல். அதனை கையில் பிடித்து விளையாட ஆரம்பிக்கிறது தான் உங்கள் தலைவன் விஜய். அரசியலுக்கு நாம் எல்லோரும் குழந்தைகள்தான் என்பது அது அடுத்தவர்களின் கருத்து. ஆனால் பாம்பாக இருந்தாலும் பயம் இல்லை என்பது தான் நம்முடைய காண்பிடண்ட். அரசியல் ஒன்றும் சினிமாத்துறை இல்லையே. பேட்டிங் ஃபீல்டு. கொஞ்சம் சீரியஸாக தான் இருக்கும்.
பாம்பாக இருந்தாலும், அரசியலாக இருந்தாலும் கையில் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்த பிறகு, சீரியஸ்னஸ் ஓட கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்து செயல்படுவது தான் நம்முடைய ஸ்டைல்; நம்முடைய ரூட்.
அப்படி செயல்பட்டால்தான் அரசியல் துறையில் இருக்க முடியும், எனர்ஜியாக இருக்க முடியும். எதிர் இருப்பவர்களை சமாளிக்க முடியும். தாறுமாறாக ஆடும் ஆட்டம் இது இல்லை. தத்துவத்தோடு ஆடும் ஆட்டம் என பெயருக்கு சொல்லக் கூடாது. கவனமாகதான் ஆட வேண்டும்” என தெரிவித்தார்.