#Vijayakanth நினைவிடத்தில் அரசியல் தலைவர்கள் மரியாதை!
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. விஜயகாந்த் உடலுக்கு லட்சக்கணக்கான மக்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது. அவரது முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகின்றது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிகாலை முதலே ரசிகர்களும், தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். விஜயகாந்தின் நினைவிடத்தில் அரசியல் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் விஜயகாந்தின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.