மதுபோதையில் இருந்த வரை காலால் எட்டி, உதைத்த போலீசார் - பணியிடைநீக்கம்!
மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபருடன் ஏற்பட்ட தகராறில் காலால் எட்டி உதைத்து
தாக்கிய போக்குவரத்து போலீசார் 3 பேரை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பம் பகுதியில் போக்குவரத்து போலீசார் வாகன
சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில்
வந்த ஹேமநாத் என்பவரை போலீசார் சோதனை செய்த போது, அவர்
மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. இந்த நிலையில் போலீசார் அவருக்கு அபராதம் விதித்ததனர். மேலும் ஹேம்நாத் லைசன்ஸ் தராததால் வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ஹேமநாத் போலீசாரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு சாவியை
தரமறுத்துள்ளார். மேலும் போலீசாரின் சட்டையை பிடித்து இழுத்ததாகவும், ஆபாசமாக
பேசி செல்போனை கீழே தள்ளியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் மற்றும் முதல் நிலைக்காவலர்கள் ஹேம்நாத்தை கால்களால் எட்டி உதைத்து தாக்கியுள்ளனர். இதனை அந்த பகுதியில் இருந்த ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரப்பியுள்ளது. தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் ஹேமநாத்தை தாக்கிய கோயம்பேடு போக்குவரத்து உதவி ஆய்வாளர் சக்திவேல், முதல் நிலை காவலர்கள் தினேஷ், அருள் ஆகிய மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்து இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.