த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சு: மன்சூர் அலிகானுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு!
நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்ப உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம் கடந்த மாதம் 19-ம் தேதி வெளியானது. இதில், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த படத்தில், மன்சூர் அலி கான் விஜய்யின் நெருங்கிய நண்பராக நடித்திருந்தார்.
இதனிடையே சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து தகாத வார்த்தைகளை பயன்படுத்தி பேசியிருந்தார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகை த்ரிஷா, லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து, மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் மன்சூர் அலி கான் மீது சென்னை பெருநகர காவல் W-1 ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 354 (A), 509 இதச ஆகிய 2 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு நடிகர் மன்சூர் அலிகானுக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது. நடிகர் மன்சூர் அலிகான் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், நோட்டீஸ் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. மன்சூர் அலிகான் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நேரடியாக அழைத்து விசாரிக்க 41a எனப்படும் நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.