#Paramakudi அருகே லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் கைது!
ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு, நடை சீட்டு வழங்குவதற்கு ரூ.10,000
லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பரமக்குடி
அருகே உள்ள ஒரு ஊரணியில் வண்டல் மண் எடுப்பதற்கு வருவாய் துறையிடம் அனுமதி
பெற்றுள்ளார்.வருவாய்த்துறை அனுமதி பெற்ற நிலையில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடைச்சீட்டு பெறுவதற்காக பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி
அலுவலர் கருப்பையாவை அணுகியுள்ளார். இதற்கு ரூ.10,000 லஞ்சம் கொடுக்குமாறு
வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்டுள்ளார். இதுகுறித்து பாலமுருகன் ராமநாதபுரம்
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் படி ரசாயனம்
தடவிய 10,000ரூபாயை பாலமுருகன் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவிடம்
லஞ்சமாக கொடுத்துள்ளர். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ்
வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையாவை கையும், களவுமாக பிடித்தனர்.இந்த சம்பவத்தில் தொடர்புடைய அலுவலக உதவியாளர் கண்ணன் என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : டெல்லி முதலமைச்சராக எப்போது பதவியேற்கிறார் #Atishi? வெளியான தகவல்!
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் பரமக்குடி தாலுகாவில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் கருப்பையா நேற்று பகல் முழுவதும் மாவட்ட ஆட்சியருடன் உடனிருந்த நிலையில் மாலை பணிகள் முடிந்து மாவட்ட ஆட்சியர் ராமநாதபுரம் சென்ற பிறகு லஞ்சம் பெறும் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.