விஷச்சாராய வழக்கு: சின்னதுரையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளியான முக்கிய தகவல்கள்!
கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு தொடர்பாக குற்றவாளி சின்னதுரையிடம் நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து கிடைத்த தகவல்கள் வருமாறு:
கடந்த 17ம் தேதி மாதேஷ் என்ற நபரிடம் இருந்து சின்னதுரை மெத்தனால் வாங்கியுள்ளார். மெத்தனால் அடங்கிய 60 லிட்டர் 4 ட்யூப் - 30 லிட்டர் 3 ட்யூப்கள், 100 சிறிய பாக்கெட்டுகள் சின்னத்துரையிடமிருந்து கண்ணுக்குட்டி (எ) கோவிந்தராஜ் வாங்கியுள்ளார்.
கோவிந்தராஜனின் சகோதரர் தாமோதரன் முதலில் குடித்து பார்த்து மெத்தனால் கெட்டுப் போய் இருப்பதாக கோவிந்தராஜ் மற்றும் மெத்தனாலை விற்பனை செய்த சின்னதுரையிடம் கூறியுள்ளார்.
கோவிந்தராஜனுக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால் அவரது தம்பி தாமோதரனே எப்போதும் சிறிதளவு குடித்து பார்த்து வாங்குவார். அதற்கு சின்னதுரை, ‘மெத்தனால் கெட்டுப்போகவில்லை, உயர்ரக சரக்கு எனக்கூறி விற்பனை செய்யுங்கள் பார்த்துக் கொள்ளலாம்’ எனச்சொல்லி கோவிந்தராஜிடம் விற்பனை செய்துள்ளார்.
எப்பொழுதும் முழு பணத்தையும் பெற்றுக் கொண்ட பிறகே சின்னதுரை மெத்தனாலை விற்று வந்த நிலையில் 17-ம் தேதி கெட்டுப்போன மெத்தனாலை கொடுக்கும்போது முன்பணம் மட்டுமே பெற்றுள்ளார்.
சின்னதுரை மெத்தனாலை மாதேஷ் என்பவரிடமிருந்து பெற்றுள்ளார் என்பதும், மாதேஷ் ஆந்திராவில் கெமிக்கல் நிறுவனங்களில் இருந்து மெத்தனாலை வாங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.
சின்னதுரை அளித்த தகவலின் பேரில் புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் மற்றும் சின்னதுரையின் நண்பர்களான மதன் குமார், ஜோசப் ராஜா ஆகிய இருவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள மதன்குமார் கடந்த 2023-ம் ஆண்டு எக்கியார்குப்பத்தில் விஷ சாராயம் விற்பனை செய்த வழக்கில் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறைக்கு சென்று சமீபத்தில் வெளியே வந்தவர். மேலும், சின்னதுரையின் மற்றொரு நண்பரான சங்கராபுரத்தைச் சேர்ந்த ஜோசப் ராஜா என்பவர் பண்ருட்டியை அடுத்த காடாம்புலியூரில் தலைமறைவாக இருந்தபோது சிபிசிஐடி போலீஸ் கைது செய்துள்ளனர்.
இந்த வழக்கில் இதுவரை கண்ணு குட்டி என்கிற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் இவர்களுக்கு மெத்தனால் விற்பனை செய்த சின்னதுரை, சின்னதுரைக்கு மெத்தனால் விற்பனை செய்த மாதேஷ் மற்றும் சின்னதுரை நண்பர்களான ஜோசப் ராஜா, மதன் குமார் ஆகிய 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் கண்ணுகுட்டி என்கிற கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா ஆகிய மூன்று நபர்களை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜூலை மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த வழக்கில் மாதேஷ் ஆந்திராவில் எந்த நிறுவனத்திடம் இருந்து மெத்தனாலை வாங்கி உள்ளார் என்பது குறித்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்த மெத்தனால் ட்யூப்களை தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.