"#31MQ-9Bdrone இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும்" - அதிபர் #JoeBiden
31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்கள் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற குவாட் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். பின்னர் இந்திய வம்சாவளியினர், அமெரிக்க வாழ் இந்தியர்களையும் சந்தித்து உரையாற்றினார். பின்னர், அமெரிக்காவின் வில்மிங்டனில் உள்ள ஜோ பைடனின் இல்லத்தில் அவரை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு மற்றும் ராணுவ ஒப்பந்தங்களை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சந்திப்பு குறித்து இந்தியா-அமெரிக்கா சாா்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
அமெரிக்காவிடமிருந்து 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதை வரவேற்பதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இந்த ட்ரோன்கள் கண்காணிப்பு, உளவு நடவடிக்கை உள்பட பல்வேறு விவகாரங்களில் இந்திய ராணுவத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும். இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு சார்ந்த உபகரணங்கள் தொடர்ந்து விநியோகம் செய்வதை உறுதி செய்யும் பாதுகாப்பு விநியோக ஒப்பந்தம் (எஸ்ஓஎஸ்ஏ) கையொப்பமிடப்பட்டதற்கும், லாக்ஹீட் மாா்ட்டின் மற்றும் டாடா நிறுவனம் இடையேயான சி-130ஜே சூப்பர் ஹொ்குளிஸ் விமான திட்டத்துக்கும் இருவரும் பாராட்டுகள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : “விதியால் அரசியலுக்கு வந்தேன்”- நியூயார்க்கில் பிரதமர் #Modi உரை!
விமானம் மற்றும் விமான என்ஜின் சார்ந்த உதிரி பொருள்களின் மேலாண்மை, சீரமைப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒரே மாதிரியாக 5 சதவீதம் ஜிஎஸ்டி விதித்துள்ள இந்திய அரசின் முடிவையும் ஜோ பைடன் வரவேற்றார். அதேபோல் இந்தியா - அமெரிக்கா பாதுகாப்பு மேம்பாட்டு சூழல் (இண்டஸ்-எக்ஸ்), இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் சிறந்த பாதுகாப்புக்கான புதிய கண்டுபிடிப்புகள் (ஐ-டெக்ஸ்) மற்றும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புக்கான கண்டுபிடிப்புகள் பிரிவு (டிஐயு) ஆகிய ஒப்பந்தங்கள் மூலம் பாதுகாப்புத் துறையில் இணைந்து செயல்படுவதற்கும் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.