பாமகவின் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டம் ; தவெகவிற்கு நேரில் அழைப்பு...!
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது பாமகவின் நீண்ட கால கோரிக்கைகளில் ஒன்றாகும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மறுக்கும் திமுகவை கண்டித்தும் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டத்தில் பங்கேற்க திமுகவை தவிர்த்து மற்ற அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாமக சார்பில் அதிமுக பொதுச்செயளாலர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று பாமக வழக்கறிஞர் பாலு, பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ள கோரி அழைப்பு கடிதத்தை அளித்தார். தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அக்கடிதத்தை பெற்றுக் கொண்டார்.