பாமக சித்திரை முழு நிலவு மாநாடு – விழுப்புரம், புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு!
பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாடு கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்றது. தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கு பிறகு ‘சித்திரை முழுநிலவு மாநாடு’ நாளை (மே 11) நடைபெறவுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டிற்கான சிறப்பு பாடல்கள், லட்சினை ஆகியவை சமீபத்தில் வெளியானது. இதற்கிடையே, சித்திரை முழுநிலவு மாநாட்டிற்கு வருகை தருபவர்களுக்கான அறிவுறுத்தல்களை காவல்துறை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இதையும் படியுங்கள் : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் சபரிமலை பயணம் ரத்து!
மேலும், இந்த மாநாட்டிற்கு வருபவர்கள் பாதுகாப்பாகவும், அமைதியான முறையிலும் வருகை தருமாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில், பாமகவின் முதல் சித்திரை முழுநிலவு மாநாட்டை ஒட்டி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள
34 மதுக்கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, விழுப்புரத்திலுள்ள 9 கடைகள், கண்டாச்சிபுரத்தில் 5, திண்டிவனத்தில் 11, மரக்காணத்தில் 2, செஞ்சியில் 4, விக்கிரவாண்டியில் உள்ள 6 கடைகள் என மொத்தமாக 34 மதுபானக்கடைகளை நாளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேபோல், புதுச்சேரியில் நாளை நண்பகல் 1 மணி முதல் சாரயம், கள்ளு, மதுபானக் கடைகள், பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் மதுபானம் வழங்கும் விடுதி ஆகிய அனைத்தையும் மூடுமாறு கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுபான கூடங்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.