பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை!
மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் புதினுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார் பிரதமர் மோடி.
இந்தியா, ரஷ்யா இடையே இதுவரை 21 வருடாந்திர உச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இரு நாடுகளிலும் ஒன்றுவிட்டு ஒன்றாக இந்த மாநாடுகள் நடத்தப்படுகின்றன. கடைசியாக, கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் இந்திய-ரஷ்யா உச்சி மாநாடு நடைபெற்றது. ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் இந்தியாவுக்கு வந்திருந்தார். அதன்பின் உச்சி மாநாடு நடைபெறவில்லை.
இந்த சூழலில் இந்தியா – ரஷ்யா இடையிலான 22-ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக, ரஷ்ய அதிபா் விளாதிமீர் புதின் விடுத்த அழைப்பின்பேரில் இரண்டு நாட்கள் பயணமாக பிரதமா் மோடி நேற்று (ஜுலை 8) ரஷ்யா சென்றடைந்தார். மாஸ்கோ விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினின் விருந்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.
இதனையடுத்து இன்று காலை மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா - ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில இந்தியா, ரஷ்யா இணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டின் அரசு அதிகாரிகளும் உடனிருந்தனர்.
இந்த சந்திப்பின்போது பேசிய பிரதமர் மோடி, "தீவிரவாதத்தை எதிர்கொண்டு வருவதால் அதன் வலி புரியும். எந்த வடிவத்திலும் தீவிரவாதத்தை எதிர்ப்போம்" என்று தெரிவித்தார். இதனை அடுத்து ரஷ்யாவில் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அங்கிருந்து ஆஸ்திரியா செல்லவிருக்கும் பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டா் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெகமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.