#Rajinikanth -ன் உடல்நிலை குறித்து விசாரித்தார் பிரதமர் மோடி!
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி விசாரித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் திடீரென சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அடிவயிற்று பகுதியில் வீக்கம் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பரிசோதனைகள் மற்றும் உரிய சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது.
அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சையின்றி செய்யப்படும் ஸ்டன்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. தற்போது, ரஜினிகாந்த் நலமாக உள்ளார் என மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் சாய் சதீஷ் தலைமையில் மருத்துவக்குழுவினர் நடிகர் ரஜினியின் உடல்நிலையை கண்காணித்து வந்ததாகவும் தகவல் வெளியானது.
இதையும் படியுங்கள் : China Open Finals : இறுதிப்போட்டியில் இத்தாலி வீரர் சின்னரை எதிர்கொள்கிறார் ஸ்பெயின் வீரர் அல்காரஸ்!
இந்நிலையில் தான் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார். ரஜினிகாந்த் மருத்துவ சிகிச்சையில் உள்ள நிலையில் பிரதமர் மோடி நேற்று அவரது மனைவி லதா ரஜினிகாந்துக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரித்துள்ளார். அதோடு ரஜினிகாந்த் பூரண நலமடைய வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இந்த தகவலை தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.