தோல்வியை நினைத்து வருந்த வீரர்களுக்கு நேரமில்லை - ராகுல் டிராவிட் பேச்சு!
"கடந்த கால தோல்வியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக கவனம் செலுத்தி விளையாட முடியாது" என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நாளை (டிச. 26) தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தோல்விக்கு பின் எந்தப் போட்டிகளிலும் பங்கேற்காமல் இருந்த ரோகித் சர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இத்தொடரில் பங்கேற்கின்றனர். அதேநேரம் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீண்டும் தனது பணிக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், கடந்த காலத்து தோல்வியை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால் அடுத்தடுத்த போட்டிகளில் சரியாக கவனம் செலுத்தி விளையாட முடியாது என்று உலகக் கோப்பை தோல்வி குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர் கூறியதாவது, "உலகக் கோப்பை தோல்வி நிச்சயம் மனவேதனை அளித்தது. தோல்வியால் ஏமாற்றம் இருந்தபோதிலும் நாங்கள் அனைவரும் மீண்டு வந்துவிட்டோம். தொழில்முறை விளையாட்டு வீரர்கள் குழந்தையாக இருக்கும்போதிலிருந்தே தோல்வியில் இருந்து மீண்டு வரவேண்டிய கட்டாயம் உள்ளது. அதற்காக அவர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அந்த வகையில் நமது வீரர்கள் தோல்வியில் இருந்து மீண்டு வருவதில் கைதேர்ந்தவர்கள். தோல்வியின் ஏமாற்றத்தை அதிகம் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால், அது அடுத்தடுத்த போட்டிகளில் உங்களை பாதிக்கும்.
தோல்வியை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதற்கு வீரர்களுக்கு நேரமில்லை. அடுத்தடுத்து முக்கியமான தொடர்கள் உள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ந்து முன்னேற வேண்டும் என்றால், தோல்வியின் ஏமாற்றங்களில் இருந்து முன்னேற வேண்டும். இந்திய அணியின் முகாமை பொறுத்தவரை ஊக்கம் நிறைந்ததாக உள்ளது. அதனால் வீரர்கள் அனைவரும் உலகக் கோப்பை தோல்வியில் இருந்து மீண்டுவிட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.