"தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை" - பின்னணி பாடகி கல்பனா விளக்கம் !
தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபல பின்னணி பாடகியாக திகழும் கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயன்றதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குடியிருப்போர் சங்கத்தினர் அளித்த தகவலின்பேரில் கல்பனாவின் வீட்டுக்குச் சென்ற காவல் துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, சுயநினைவின்றி கிடந்த கல்பனாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் கல்பனா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளித்து காப்பாற்றினர். இந்நிலையில், தற்கொலை முயற்சி தொடர்பாக காவல் துறையினர் கல்பனாவிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சரியாக தூக்கம் வராத காரணத்தால் அதிக எண்ணிக்கையில் தூக்க மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் இது தொடர்பாக கல்பனாவின் மகள் கூறுகையில், "என் அம்மா இப்போது நன்றாக இருக்கிறார். அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மன அழுத்தம் காரணம் அம்மா, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தினமும் தூக்க மாத்திரைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அவர் எடுத்துக்கொண்ட மாத்திரையில் கொஞ்சம் அதிகமாகி விட்டது. அம்மா தற்கொலை முயற்சி எல்லாம் செய்யவில்லை, தயவு செய்து தவறான செய்திகளை பரப்பாதீர்கள்" என்று கூறியுள்ளார்.