கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதித்தால் அபராதம் விதிக்கும் மசோதா - புதுவை சபாநாயகர் அதிரடி
புதுச்சேரியில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்பான கோப்புகள் துணைநிலை ஆளுநர், தலைமை செயலர், அரசு செயலர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நாள் கணக்கில் எவ்வித காரணமின்றி முடக்கி வைத்துள்ளதால், மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்த முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் சட்டமன்றத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொது பேசிய அவர்,
”புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 15 சட்டப்பேரவையின் 6 கூட்டத்தொடரின்,
இரண்டாவது பகுதி வரும் 18-ஆம் தேதி கூட உள்ளது. இந்த கூட்டத்தொடரில்
புதுச்சேரியில் வணிகம் செய்தலை எளிதாக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட
உள்ளது. அந்த மசோதாவில் தலைமை செயலாளர் தொடங்கி அனைத்து மட்டங்களில் உள்ள அரசு அதிகாரிகள் எவ்வித காரணமின்றி கோப்புகளை காலதாமதம் செய்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 250 அபராதம் விதிக்கும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ”சட்டமன்ற கூட்டம் எத்தனை நாட்கள் நடைபெறும் என அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி முடிவு செய்யும் என்றும், மேலும் மாநில அந்தஸ்து உள்ளிட்ட தனிநபர் மசோதாக்கள் கொண்டுவந்தால், அது தொடர்பாக பரிசீலனை செய்து விவாதம் நடத்தப்படும்” என்றார்.