“சர்வதேச அளவில் யுபிஐ, ரூபே-யை செயல்படுத்த திட்டம்” - #RBI தகவல்!
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நிதிதொழில்நுட்ப திருவிழா 2024-இல் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த் தாஸ் பங்கேற்று அவர் பேசியதாவது:
நிதி உள்ளடக்கம், பொது எண்ம கட்டமைப்பை மேம்படுத்துதல், நுகர்வோர் பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு, நிலையான நிதி மற்றும் உலகளவிலான நிதி சேவைகளை ஒருங்கிணைக்க பல்வேறு முயற்சிகளை ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு நாடுகளுடன் பொருளாதார கூட்டமைப்பு, நிதி உள்கட்டமைப்பு, எல்லை தாண்டிய இணைய பணப் பரிவர்த்தனைகளை வலுப்படுத்த இருதரப்பு ஒப்பந்தங்களும் கையொப்பமிடப்பட்டு வருகின்றன.
உலகுக்கே தேவையான நிதி சேவைகளை வழங்குவதற்கான மேம்படுத்தப்பட்ட நிதி தொழில்நுட்பங்கள் இந்தியாவில் உள்ளன. எனவே, யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பூடான், நேபாளம், இலங்கை, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், நமீபியா, பிரான்ஸ், பெரு உள்ளிட்ட நாடுகளுடன் யுபிஐ பரிவர்த்தனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நிதி தொழில்நுட்பத் துறையில் ரூ.48,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா உருவவெடுத்துள்ள இத்தருணத்தில், சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி நிதி நிறுவனங்கள் மேலும் வளர்ச்சியடைய வேண்டும்.
இந்தியாவின் எண்ம கட்டமைப்பில் ஜன் தன்-ஆதார்-கைப்பேசி, யுபிஐ, ஒருங்கிணைந்த கடன்வழங்கல் இடைமுகம் (யுஎல்ஐ) ஆகிய மூன்று புதிய கருவிகளும் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன” என்றார்.