கேரளாவில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - இன்று மட்டும் 70,000 முன்பதிவுகள்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில், இன்று மட்டும் 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நவம்பர் மாதம் 16-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த மண்டல, மகர விளக்கு பூஜைகளை தொடர்ந்து, கோயிலில் தினந்தோறும் விரதமிருக்கும் ஐயப்ப பக்தர்கள், சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். தினமும் 60ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால், விடுமுறை நாட்கள் மட்டுமின்றி சபரிமலையில் தினமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சாமி தரிசனம் செய்ய வெகுநேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக, தேவசம்போர்டு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனைத்தொடர்ந்து, நேற்று (டிச. 9) மட்டும் VirtualQ இணையதள செயலியில், 90,000 முன்பதிவுகள் செய்யப்பட்டன. இவர்களில் 65,000 பேர் மட்டுமே தரிசனம்
மேற்கோள்ள முடிந்தது. தரிசனம் செய்ய இயலாத பக்தர்கள் இன்று காலை பதினெட்டாம் படியை மிதிக்க அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று 70,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் சாமி தரிசனம் செய்ய
காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.