'திடீர்' பெட்ரோல் தட்டுப்பாடு; குதிரையில் உணவு டெலிவரி - வீடியோ வைரல்!
லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் ஏற்பட்ட பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவர் குதிரையில் சென்று உணவு விநியோகம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடரில், இந்திய குற்றவியல் சட்டம் (ஐபிசி). குற்றவியல் நடைமுறை சட்டம் (சிஆர்பிசி) மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் (ஐஇசி) ஆகிய சட்டங்களுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சக்ஷயா, பாரதிய நகரிக் சுரக்ஷா ஆகிய 3 புதிய சட்டங்கள் சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
இந்த சட்ட மசோதாக்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்தார். அதனைத்தொடர்ந்து, அந்த சட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன. இந்த புதிய சட்டத்தின்படி, (பாரதிய நியாய சன்ஹிதா) சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு தெரிவிக்காமல் தப்பியோடும் கனரக வாகன ஓட்டுநருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில் தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இந்த கடுமையான ஷரத்துகளை திரும்பப் பெறக் கோரி ஜம்மு - காஷ்மீா், பஞ்சாப், ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு வட மாநிலங்களில் லாரி ஓட்டுநா்கள் திங்கள்கிழமை முதல் இன்று காலை வரை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அத்தியாவசியப் பொருள்கள் விநியோகம், பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
#Zomato Delivery Agent Drops Order In #Hyderabad On A Horse Due to Fuel Shortage.@zomato to customer.
Getting your order "Straight from the Horse's Mouth"#INDvsSA pic.twitter.com/is2oyq7lXP— BALIDAN4INDIA (@peacei24) January 3, 2024
ஹைதராபாத்தில் உள்ள பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஹைதராபாத்தில் உணவு விநியோகம் செய்யும் ஊழியர் ஒருவர், குதிரையில் சொமேட்டோ பையை மாட்டிக் கொண்டு உணவை விநியோகிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த உணவு விநியோகிக்கும் ஊழியரின் அர்ப்பணிப்பையும், புதிய முயற்சியையும் இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.