ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைகிறது - பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்.!
ரூ.5 முதல் ரூ.10 வரை பெட்ரோல் டீசல் விலை குறைய உள்ளதாகவும் பிப். மாதம் அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்கின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினம்தோறும் நிர்ணயிக்கப்படும். இந்த நடைமுறையைத்தான் எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.
'சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனாலும் கூட 'கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாததால், எண்ணெய் நிறுவனங்கள் கடந்த 6 மாதங்களில் ரூ. 1.32 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளதாகவும் இதனால் சாமானிய மக்கள் மீது சுமை திணிக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உச்ச அளவாக கடந்த 21 மாதங்களாக எந்த மாற்றமின்றி நீடித்து வருகிறது. உலகின் இரு பகுதிகளில் நிலவும் போர்ச் சூழலால், எண்ணெய் சந்தைகள் மிகவும் ஸ்திரமற்ற நிலைமையில் உள்ளன. செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
உலக அளவில் 18 சதவீத எண்ணெய் மற்றும் 4-8 சதவீத இயற்கை எரிவாயு வர்த்தகம் செங்கடல், சூயஸ் கால்வாய் வழியாக நடைபெறுகிறது. இதுபோன்ற கொந்தளிப்பான சூழலில், எரிபொருள்களின் இருப்பை உறுதி செய்வதே முதன்மையான பொறுப்பாகும். எண்ணெய் சந்தைகள் ஸ்திரமடைந்த பிறகே எரிபொருள் விலை குறைப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களால் எந்த முடிவும் எடுக்க முடியும்' என காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டிற்கு மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் சமீபத்தில் பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்த மாதம் பெட்ரோல் டீசல் விலை ரூ.5 முதல் ரூ.10வரை குறைவதற்கான வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதியில் எண்ணெய் நிறுவனங்களின் மூன்றாவது காலாண்டிற்கான அறிக்கைகள் வெளியாக உள்ளன. இதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.